சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தமிழக தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது. ராணுவத்திற்குச் சொந்தமான இந்த இடத்திற்குத் தமிழக அரசு மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகிறது.
இந்த சூழலில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப இங்கு போதிய இடவசதி இல்லாததால் கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது 4 செயலாளர்களின் அறைகளை, அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தலைமைச் செயலகத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு மாற்றலாமா என்ற ஆலோசனையை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
முதலில், கிண்டி ஆளுநர் மாளிகை எதிரே உள்ள இந்த இடம் முதலில் பரிசீலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடற்கரைப் பகுதியில் உள்ள காலியிடத்தை தேர்வு செய்யலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த இடங்கள் தலைமைச் செயலக அமைப்பிற்குப் போதுமானதாகவோ அல்லது உகந்ததாகவோ இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதால், மாற்று இடங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
