சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் : இதுதான் காரணமா?

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகரின் பல முக்கிய சந்திப்புகளில் ஏற்படும் சிக்னல் கோளாறுகள் காரணமாகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தானியங்கி சிக்னல்கள் காரணமா?

சென்னை காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பல்வேறு சாலை சந்திப்புகளில் சுமார் 300 தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய சூழலில் பல இடங்களில் இந்தத் தானியங்கி சிக்னல்கள் சரியாக செயல்படுவதில்லை.

கடும் போக்குவரத்து நெரிசல்

தானியங்கி சிக்னல்கள் கோளாறு காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிக்னல் எப்போது மாறும் என்பதை அறிய முடியாமல் வாகன ஓட்டிகள் குழப்பமடைவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.

சிக்னல் கோளாறுகளுக்கு பின்னணி காரணம் என்ன?

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் திடீரென முடங்கியதற்குக் காரணி ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் முடிவடைந்ததே என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யும் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில் ஏற்பட்ட காலதாமதமே இந்தத் திடீர் முடக்கத்திற்குக் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

போக்குவரத்து காவல் துறை அளித்துள்ள விளக்கம்

அனைத்துச் சிக்னல்களிலும் உள்ள டிஜிட்டல் வினாடிப் பலகைகள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்தச் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, அனைத்து தானியங்கி சிக்னல்களும் மீண்டும் சீராகச் செயல்படத் தொடங்கும் என போக்குவரத்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Post

Latest News