10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள்; மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி

டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், இதுவரை ஒரு வழக்கில் கூட தண்டனை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் கல்வி அமைப்பு ஒருகாலத்தில் நாட்டின் மிகப்பெரிய பலமாக இருந்ததாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, தற்போது அது ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு எட்டாத ஒன்றாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் மாணவர்கள் செலவிடும் தொகை ஆண்டுக்கு சுமார் ரூ.1.32 லட்சம் கோடி எனவும், இது மத்திய அரசின் ஆண்டு கல்வி ஒதுக்கீடான ரூ.1.4 லட்சம் கோடிக்கு நிகரான அளவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற சூழலில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Related Post

Latest News