உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு தொடர்பாக கிராம பஞ்சாயத்து வழங்கிய வினோத தீர்ப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ராம்பூர் மாவட்டத்தின் தண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் நசாகத் என்பவர் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பின்னர் நேஹா என்ற பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆண் குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்த அவருக்கு மீண்டும் இரண்டு பெண் குழந்தைகளே பிறந்துள்ளனர்.
இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் அணுகுமுறை மாறிவிட்டதாக முதல் மனைவி அஷ்ரா குற்றம்சாட்டியுள்ளார். தற்போது கணவர் இரண்டாவது மனைவியுடன் மட்டுமே வசித்து வருவதாகவும், தனக்கும் குழந்தைகளுக்கும் தேவையான செலவுகளை வழங்கவில்லை என்றும் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் இரண்டு மகள்களை வளர்ப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கிராம மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.
இறுதியாக, கணவர் வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் வசிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு நாள் அவரது தனிப்பட்ட விருப்பத்திற்கு விடப்பட்டது.
அதோடு, மாதந்தோறும் ரூ.2,000 செலவுத் தொகையையும் முதல் மனைவிக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்தின் இந்த முடிவை கணவரும், இரு மனைவிகளும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
