சுங்கச்சாவடிக்கு செல்ல வேண்டாம்! டோல் பயணிகளுக்கு புதிய டிஜிட்டல் சேவை

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள், இனி நேரில் செல்லாமல் ராஜ்மார்க் யாத்ரா செயலி வழியாக லோக்கல் டோல் பாஸ் பெற முடியும்.

இதற்கு முன்பு லோக்கல் டோல் பாஸ் பெற சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று முகவரி மற்றும் வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு, ராஜ்மார்க் யாத்ரா செயலி மூலமாக சில நிமிடங்களிலேயே விண்ணப்பிக்கக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாத காலத்திற்கு அந்த சுங்கச்சாவடியை பலமுறை பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கும்.

யார் லோக்கல் டோல் பாஸ் பெறலாம்?

இந்த வசதி அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும்.
வாகனம் விண்ணப்பதாரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வாகனத்துடன் செல்லுபடியாகும் FASTag இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால், செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தற்போது எந்த இடத்தில் இந்த சேவை?

இந்த புதிய டிஜிட்டல் வசதி தற்போது டெல்லியில் உள்ள முண்ட்கா – பக்கர்வாலா சுங்கச்சாவடியில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டால், அடுத்த கட்டமாக நாடு முழுவதும் உள்ள பிற தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post

Latest News