ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த அனைவருக்கும் ஏற்கனவே கடுமையான உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மாநில சுகாதார ஆணையர் வெளியிட்ட தகவலின்படி, ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முதல் பாதிப்பு கடப்பா மாவட்டத்தில் பதிவானது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் இருவர், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மீண்டும் பரவுகிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
