அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விளம்பரப் பலகை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டிகளின் மீது இருப்பது போன்ற காட்சியுடன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் வெள்ளை மாளிகை தீப்பிடித்திருப்பதைப் போன்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரசீக மொழியில் “ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
டிரம்பை குறிவைத்து இவ்வாறான பேனர் வைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பு தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில், டிரம்ப் திறந்த சவப்பெட்டிக்குள் இருப்பதைப் போன்ற மற்றொரு பெரிய பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனரில் பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் “நாங்கள் டிரம்பைக் கொல்வோம்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
அமெரிக்கா – ஈரான் உறவில் அதிகரிக்கும் பதற்றம்
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. முக்கிய ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
இதன் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது. அமெரிக்க படைகள் உள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் பதிலடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
