சீனாவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர், தனது ரூ.28 கோடி மதிப்பிலான சொத்துகளை பெற்றோருக்கு வழங்காமல், சிறுவயது நண்பருக்கே உயில் எழுதி வைத்திருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதத்தை எழுப்பியுள்ளது.
“லி” (Li) என்ற குடும்பப் பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவர், தனது உயிலை ஷாங்காயில் சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 2 கோடி யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 கோடி) மதிப்புள்ள வீடு மற்றும் வங்கி சேமிப்புத் தொகை அடங்கும்.
லி-யின் பெற்றோர் விவாகரத்து செய்து, பின்னர் வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் தற்போதைய வாழ்க்கைத் துணைகள் தனக்கு நெருக்கமானவர்கள் அல்ல என்றும், தனது சொத்துகள் அவர்களிடம் செல்ல வேண்டாம் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பழகிய தனது சிறுவயது நண்பரே இந்த சொத்துகளை பெற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட லி, எதிர்பாராத விபத்து போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தனது சொத்துகள் தனது விருப்பப்படி பகிரப்பட வேண்டும் என்பதற்காகவே இளம் வயதிலேயே உயிலை பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
