உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது. இனி வாட்ஸ்அப்பில் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள மொபைல் எண் தேவையில்லை; அதற்குப் பதிலாக இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களைப் போலத் தனித்துவமான ‘யூசர் நேம்’ இருந்தாலே போதும் என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது.
இதுவரை வாட்ஸ்அப்பில் புதிய நபர்களுடன் பேச வேண்டும் என்றாலோ அல்லது ஒருவரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றாலோ அவர்களது மொபைல் எண் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், புதிய அப்டேட்டின்படி பயனர்கள் தங்களுக்கென ஒரு தனித்துவமான யூசர்நேமை உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த மாற்றத்தின் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:
நீங்கள் ஏதேனும் ஒரு பெரிய வாட்ஸ்அப் குரூப்களில் இணையும்போது, அக்குரூப்பில் உள்ள மற்ற நபர்களுக்கு உங்களது போன் நம்பர் இனி தெரியாது. உங்களுக்குத் தெரியாத புதிய நபர்களுக்கு நீங்கள் முதன்முதலில் மெசேஜ் அனுப்பும்போது, உங்களது மொபைல் எண் முற்றிலும் மறைக்கப்பட்டு, உங்களது யூசர் நேம் மட்டுமே அவர்களுக்குக் காட்டப்படும்.
இது எப்படிச் செயல்படும்?
வாட்ஸ்அப்பில் நாம் உருவாக்கும் யூசர் நேம் ஆனது குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். மற்ற சமூக ஊடகங்களைப் போல வாட்ஸ்அப்பில் யாரையும் யூசர் நேம் கொண்டு சாதாரணமாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. துல்லியமான யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். மேலும், புதியவர்கள் உங்களைத் தேவையின்றித் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த ‘யூசர் நேம் கீ’ என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
