உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியை குறிவைத்து, புதிய வகை சைபர் தாக்குதல் பரவி வருவதாக மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மால்வேர் தாக்குதலானது மொபைல் போன்களை விட, கணினிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களைத்தான் அதிகம் குறிவைக்கிறது. குறிப்பாக, விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் அல்லது வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்கள் இந்த ஆபத்தான தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் அனுப்பும் இந்தக் கோப்புகள் பார்ப்பதற்கு சாதாரண பிடிஎஃப் அல்லது ஆவணக் கோப்புகள் போன்ற போலி முகமூடியுடன் காட்சியளிக்கும். பயனர்கள் அந்தப் போலியான கோப்பைத் திறந்த அடுத்த நொடியே, அந்த மால்வேர் கணினியில் இன்ஸ்டால் ஆகிவிடும்.
இதன் விளைவாக, உங்களது கணினி அல்லது மொபைல் சாதனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் உங்கள் கையை விட்டுப் பறிபோகும். மேலும், சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் மிகவும் ரகசியமான தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஹேக்கர்கள் மிக எளிதாகத் திருடிவிடுவார்கள் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்த மோசடி நெட்வொர்க் இந்தியா மட்டுமின்றி மலேசியா, பிரேசில், மெக்சிகோ, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.
