வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,430 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோரை தேடும் மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அரசு தரப்பில் குறைந்தது 68,900 பேர் குறித்து காணாமல் போனதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லா குவைரா மாநிலம் மற்றும் தலைநகர் கராகஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் தாங்களாகவே மண்வெட்டி, கயிறு மற்றும் எளிய கருவிகளை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி உயிர் பிழைத்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரிடருக்குப் பிறகு பல நாடுகள் வெனிசுலாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. மெக்சிகோ, அமெரிக்கா, பிரேசில், எல் சால்வடோர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு வந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியவர்களை கண்டறிய நவீன கருவிகள், மீட்பு நாய்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவ உதவி மற்றும் அவசர சிகிச்சை வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

Related Post

Latest News