அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளுக்கு தான் விடுத்த கெட்ட வார்த்தைகளுடனான கடுமையான எச்சரிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படும் மிக முக்கிய கடல் பகுதியான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ ஈரான் மீண்டும் மூட முயன்றால், “நீங்கள் உங்கள் நாட்டுக்கு உயிரோடு திரும்ப முடியாது” என்று டிரம்ப் மிகக் காட்டமாக மிரட்டியுள்ளார்.
இதுமட்டுமின்றி, சர்வதேச கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். “தேவைப்பட்டால் அந்தப் பகுதியை நாங்கள் கைப்பற்றுவோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா சார்பாக சுங்கக் கட்டணம் வசூலிப்போம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடுத்த 60 நாட்களுக்குள் ஈரான் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் இந்த கட்டண முறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
முன்னதாக, பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மார்ச் தொடக்கத்தில் இருந்து ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகத்தான் செல்கிறது என்பதால், டிரம்ப்பின் இந்த பேச்சு உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “தங்கள் நாடு யுரேனியம் செறிவூட்டும் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது” என்று கூறியதற்குப் பதிலடியாகவே டிரம்ப் இந்த ஆக்ரோஷமான கருத்தைத் தெரிவித்துள்ளார். “அவர் தன் வாயை அடக்கிப் பேச வேண்டும். இல்லையென்றால் ஈரானின் மற்ற பகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம்” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் 10 வாரங்களுக்குப் பிறகு முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசி வருகின்றனர். ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா இடையேயான பிராந்திய மோதல்களைத் தடுப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் தனது பிராந்திய விரோதப் போக்கைக் கைவிட்டால், இரு நாடுகளின் உறவில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வர அமெரிக்கா தயாராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
