ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம், மழை பெய்ய வேண்டி வினோதம் : எங்கே தெரியுமா?

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விவசாய செழிப்பிற்காகவும் வறட்சி நீங்கவும் மக்கள் பல்வேறு வினோத வழிபாடுகளைச் செய்வது வழக்கம். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மழை பெய்ய வேண்டி இரண்டு ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்னும் மழை பெய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால், இந்திரன் குளிர்ந்து மழை பொழியும் என்பது அந்த கிராம மக்களின் நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.

இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜதின் கதுவா (வயது 29), கலந்தி நாயக் (27) ஆகிய இரு வாலிபர்களும் நேற்று முன்தினம் மாலை சித்தேஸ்வரி கோவிலில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்ததும், அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கோவில் வளாகத்தில் தடபுடலான விருந்து உபசரிக்கப்பட்டது. மக்கள் உணவருந்திவிட்டு தம்பதிகளை வாழ்த்திச் சென்றனர். மழை வேண்டி நடத்தப்பட்ட இந்த வினோத திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Related Post

Latest News