உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இன்று பலரும் சர்க்கரையை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். ஆனால், உணவில் இருந்து சர்க்கரையை முழுமையாக நீக்குவது குடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, உடலில் வீக்கத்தையும் ஏற்படுத்தும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
குவைத் நகரில் உள்ள தாஸ்மேன் நீரிழிவு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ரஷீத் அகமது இதுகுறித்து கூறுகையில், “குறைந்த கொழுப்புள்ள உணவுகளில் இருந்து சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, எதிர்பாராத விதமாக குடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும். மேலும் இது உடலில் தேவையற்ற வீக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சர்க்கரையை முழுமையாக ஒதுக்குவதை விட, சீரான ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வதே முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சர்க்கரை முற்றிலும் இல்லாத உணவுகளை உட்கொண்ட எலிகளுக்கு குடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் சமநிலை மாறுவது மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக குடிக்கலாம் என்று கூறவில்லை. மாறாக, எந்த ஒரு உணவுப் பொருளையும் முற்றிலும் தவிர்க்காமல், அளவோடு மிதமாக உட்கொள்வதே குடல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு நல்லது என்பதை உணர்த்துகிறது.
