அக்காவை கொலை செய்த தம்பி, காதலனுடன் பேசியதால் வெறிச்செயல் : நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலியில் காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராமலட்சுமி, கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ராமலட்சுமி தனது காதலருடன் செல்போனில் பேசுவதை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பெற்றோர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால், பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வெளியே சென்றிருந்த நேரத்தில், ராமலட்சுமி மீண்டும் தனது காதலருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்கிருஷ்ணன், அக்காவிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், முத்துக்கிருஷ்ணன் அரிவாளை எடுத்து ராமலட்சுமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடியுள்ளார்.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமலட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதையடுத்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் சொந்த அக்காவையே தம்பி கொலை செய்த இந்த சம்பவம், திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News