வெயிலுக்கு ‘பிரேக்’! தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் குறையும் – பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. ஆனால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. நேற்று சென்னையில் வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. பல பகுதிகளில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை நேரத்திலும் வெப்பம் குறையாமல் நீடித்தது.

இந்நிலையில், நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும், ஜூன் 13-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நெல்லை மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நெல்லை மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில பகுதிகளில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு அடுத்த சில நாட்களில் நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News