புதிய எஸ்யூவி கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஹோண்டா நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஜூன் 2026 மாதத்திற்காக ஹோண்டா எலிவேட் (Honda Elevate) மாடலுக்கு ரூ.2.12 லட்சம் வரை பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகையின் கீழ், எலிவேட் ZX டாப் வேரியன்ட்டுக்கு ரூ.40,000 வரை நேரடி ரொக்கத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனுடன், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகைகள், லாயல்டி போனஸ் மற்றும் 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட பல நன்மைகளும் வழங்கப்படுகின்றன. 2025 மாடல் ஆண்டு வாகனங்களுக்கும் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஹோண்டா எலிவேட் எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.60 லட்சம் முதல் ரூ.16.57 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகைகள் ஜூன் 30, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : எலக்ட்ரிக் ஸ்கூட்டர் vs எலக்ட்ரிக் பைக் : எதை வாங்குவது நல்லது?
புதிதாக எஸ்யூவி வாங்க நினைப்பவர்கள் இந்த தள்ளுபடி காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், சலுகைகள் தொடர்பான முழு விவரங்களை அருகிலுள்ள ஹோண்டா ஷோரூம்களில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிவேட் எஸ்யூவில் உள்ள வசதிகள் என்ன?
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இந்த இன்ஜின் 119 bhp பவர் மற்றும் 145 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பு அம்சங்களிலும் எலிவேட் முன்னிலை வகிக்கிறது. அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஹோண்டா சென்சிங் ADAS தொழில்நுட்பம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
