தீவிர கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் புதிய மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டாராக்ஸோன்ராசிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை புற்றுநோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Revolution Medicines என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த மாத்திரை சுமார் 500 நோயாளிகளிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன:
வழக்கமான கீமோதெரபி சிகிச்சை பெற்ற புற்றுநோயாளிகள் சராசரியாக 6 மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்ந்தனர். ஆனால், இந்த புதிய ‘டாராக்ஸோன்ராசிப்’ மாத்திரையை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சராசரியாக 13 மாதங்கள் வரை உயிர்வாழ்ந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் உயிர்வாழும் காலம் இருமடங்காக அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணையப் புற்றுநோயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் கிராஸ் என்ற புரதத்தின் செயல்பாட்டை இந்த புதிய மருந்து தடுக்கிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியும் பரவலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகளில் கிராஸ் மரபணு மாற்றம் காணப்படுவதால், இந்த மருந்து எதிர்காலத்தில் பலருக்கும் பயனளிக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
புற்று நோய் ஏற்பட காரணம் என்ன?
மனித உடலில் ஏற்படும் மிக விசித்திரமான, அதே சமயம் அச்சம் தரக்கூடிய ஒரு நோய் தான் இந்த புற்றுநோய். இந்த நோய் ஏன் ஏற்படுகிறது? இதற்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்பதுதான் மருத்துவரின் பதிலாக உள்ளது.
புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், ரசாயன தொழிற்சாலைகளில் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்தல் போன்றவை பெரியவர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்குகின்றன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், இரசாயன உரங்கள் ஆகியவற்றின் பாதிப்பால் சில குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், நம் உடலில் புதிய செல்கள் உருவாவதற்கும், பழைய செல்கள் அழிவதற்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். இந்தச் சமநிலையை நம் மரபணுக்கள் இழக்கும்போதுதான், அங்கே புற்றுநோய் என்ற அரக்கன் தன் ஆட்டத்தைத் தொடங்குகிறான். தகுந்த வாழ்வியல் மாற்றங்களும், விழிப்புணர்வும் மட்டுமே இதிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
