மழைக்காலங்களில் மட்டும்தான் கொசு அதிகமாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் கோடைக்காலத்திலும் கூட கொசுத் தொல்லை அதிகமாகத்தான் இருக்கிறது. மனிதர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சீனாவின் சாங்குவைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் லேசர் தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து கொசுக்களை அழிக்கும் புதிய அதிநவீன கருவி ஒன்றை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏ.ஐ. கருவியானது காற்றில் பறக்கும் கொசுக்களை அதிநவீன சென்சார்கள் மூலம் கண்டறிந்து, லேசர் கதிர்களைப் பாய்ச்சி துல்லியமாக அழிக்கிறது.
இந்த சாதனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், முதலில் சுற்றுப்புறத்தை தொடர்ந்து கண்காணித்து, கொசுக்களின் தோற்றம் மற்றும் அசைவுகளை அடையாளம் கண்டுபிடிக்கும். பின்னர், கொசு இருப்பதை உறுதிசெய்தவுடன் அதனை துல்லியமாக குறிவைத்து ஒளிக்கதிர் மூலம் அழிக்கும் வசதி இதில் சேர்க்கப்பட்டது.
பாதுகாப்பு அம்சங்களும் இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. வீட்டில் மனிதர்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பதை தனியாக கண்காணிக்கும் மற்றொரு கண்காணிப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனம் ஒரு இரவு முழுவதும் செயல்பட்டபோது வீட்டில் இருந்த அனைத்து கொசுக்களும் அழிக்கப்பட்டதாக அதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார். இந்த சாதனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொசுக்களினால் ஏற்படும் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஏ.ஐ. மற்றும் லேசர் கருவி பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
