ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கி.மீ பயணம்… டொயோட்டாவின் புதிய மின்சார கார் அறிமுகம்

டொயோட்டா நிறுவனம் புதிய முழு மின்சார எஸ்.யு.வி வாகனமான “அர்பன் குரூசர் எபெல்லா”வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே சார்ஜில் 543 கி.மீ வரை பயணம் செய்யும் திறன் மற்றும் நவீன வசதிகள் இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மின்சார வாகனங்கள் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கார் நிறுவனம் பல்வேறு வசதிகள் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், இந்திய மின்சார கார் சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் வகையில், டொயோட்டா நிறுவனம் தனது புதிய மின்சார எஸ்.யு.வி வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. “அர்பன் குரூசர் எபெல்லா” என பெயரிடப்பட்டுள்ள இந்த கார், ஆரம்ப விலையாக ரூ.23.60 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த புதிய வாகனம் முழுக்க மின்சார சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே முறை முழுச் சார்ஜ் செய்தால் சுமார் 543 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வண்ணங்களில் இந்த வாகனம் கிடைக்கிறது. உள்புற வசதிகளிலும் இந்த வாகனம் பல புதிய அம்சங்களுடன் வந்துள்ளது. பெரிய தொடுதிரை தகவல் அமைப்பு, குளிரூட்டும் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், உயர்தர ஒலி அமைப்பு, சுற்றுப்புற ஒளி வசதி, காற்று தூய்மைப்படுத்தி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் வடிவமைப்பு, கஃபே ஒயிட், ப்ளூயிஷ் பிளாக், கேமிங் கிரே, ஸ்போர்ட்டின் ரெட் மற்றும் என்டைசிங் சில்வர் போன்ற வண்ணத் தேர்வுகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.

இந்த வாகனம் 2700 மிமீ வீல்பேஸையும், 4,285 மிமீ நீளத்தையும், சுமார் 1,800 மிமீ அகலத்தையும், மற்றும் கிட்டத்தட்ட 1,640 மிமீ உயரத்தையும் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களிலும் நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. ஏழு ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

Related Post

Latest News