சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கு கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக, அதிமுக தோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, அதிமுக இரண்டு அணிகளாக செயல்படத் தொடங்கியது. ஒரு தரப்பை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வரும் நிலையில், மற்றொரு தரப்பாக சண்முகம் அணியினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த அணியில் உள்ள சிலர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, பெருந்துறை தொகுதி உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை தற்போது ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் தவெக-வில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவைப் பொறுத்தவரை தென்மாவட்டங்களை மிக முக்கிய நிர்வாகியாக இசக்கி சுப்பையா இருந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2011 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களிலும் இசக்கி சுப்பையா அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். குறிப்பாக 2011ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
