தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமாகக் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 108 டிகிரியை எட்டியுள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் மின்சாரம் தடைபடுவதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் பெரம்பூர், ராயபுரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் தொடர்ச்சியான மின்தடை ஏற்பட்டுள்ளது.
இரவு நேர மின்வெட்டால் ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டையில் மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
