நோ டிராஃபிக் ஜாம்., 5 நிமிடத்தில் உணவு; ட்ரோன் டெலிவரியில் அசத்தும் சீனா

தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாதித்து வரும் சீனா, இப்போது உணவு விநியோக துறையிலும் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. மனிதர்களின் உதவியின்றி, ட்ரோன்கள் மூலம் உணவை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறை அங்கு வேகமாக பரவி வருகிறது.

சீனாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி நிறுவனமான மெய்டுவான் மற்றும் அலிபாபாவின் எலி. மீ ஆகிய நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளன.

எப்படி செயல்படுகிறது?

வாடிக்கையாளர்கள் வழக்கம்போல மொபைல் ஆப்பில் உணவை ஆர்டர் செய்கிறார்கள். உணவகம் அந்த ஆர்டரை தயார் செய்ததும், ட்ரோன் அந்த உணவை எடுத்துச் செல்கிறது. வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு டெலிவரி பெட்டியில் ட்ரோன் இறங்கி உணவை வைக்கிறது.

அதன் பிறகு, வாடிக்கையாளர் OTP மூலம் அந்த பெட்டியை திறந்து உணவை பெற்றுக்கொள்கிறார். இந்த முழு செயல்முறையும் GPS மற்றும் தானியங்கி வழிநடத்தல் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறுகிறது.

நோ டிராஃபிக் ஜாம்

போக்குவரத்து நெரிசல் இல்லாததால், 15–20 நிமிடங்களுக்குள் உணவு கிடைக்கிறது. சில இடங்களில் 2 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 5 நிமிடங்களில் கடக்கும் திறனும் உள்ளது. அதே நேரத்தில், ட்ரோன் டெலிவரிக்கு சில சவால்களும் உள்ளன. பலத்த காற்று அல்லது கனமழை போன்ற மோசமான வானிலை நிலைகளில் ட்ரோன்களை இயக்குவது கடினம்.

இந்த தொழில்நுட்பம் நகரங்களுக்கு மட்டும் அல்லாமல் சுற்றுலா தளங்களிலும் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மலை ஏறும் பயணிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் ட்ரோன் மூலம் வழங்கப்படும் வசதி அறிமுகமாகியுள்ளது.

Latest News