மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சூழலில், டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் நிலவினாலும், நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான கட்டுப்பாடுகள், அணு ஆயுத திட்டம் போன்ற முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
அமெரிக்கா தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் திறக்க வேண்டும் என்றும், அணு ஆயுத முயற்சிகளை ஈரான் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகள் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனது சமூக ஊடக தளமான Truth Socialல் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் தன்னுடைய கையில் அதிநவீன துப்பாக்கியுடன், வெடிப்புகள் பின்னணியாகக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ‘இனியும் நல்லவராக இருக்க முடியாது’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


