திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்’ வைக்கப்பட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று(ஏப்.24) காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். திருச்சி மாநகர காவல் தெற்கு இணை ஆணையர் சிருஷ்டிசிங் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க : விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்கு தெரியுமா?
அப்போது இணை ஆணையர் சிருஷ்டிசிங் வேகமாக ஓடி வந்து அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபல பத்திரிகையின் புகைப்படக்காரர் மூர்த்தியை பார்த்து நீ அத்துமீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ரூமுக்குள் நுழைந்து விட்டாய் என்று கூறி அவரை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் காவல்துறை அதிகாரி மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த மாநகர காவல் இணை ஆணையர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


