பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாநிலங்களவை எம்.பி.க்களாக இன்று பதவியேற்றனர்.
பீகார், அசாம், அரியானா, இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 16 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இந்திய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை சபாநாயகருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த 16 பேரில் 8 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், 3 பேர் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிதின் நபின் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர் ராம் நாத் தாக்கூரும் பதவியேற்றார். அவர் பீகாரிலிருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உபேந்திர குஷ்வாஹா மற்றும் சிவேஷ் குமார் ஆகியோரும் பீகாரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அசாம் மாநிலத்திலிருந்து தெராஷ் கோவல்லா, ஜோகன் மோகன் மற்றும் பிரமோத் போரோ ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து லட்சுமி வர்மா மற்றும் பூலோ தேவி நேதம், அரியானா மாநிலத்திலிருந்து கரம்வீர் சிங் பவுத் மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவியேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் மனு சிங்வி மற்றும் வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் தெலங்கானாவிலிருந்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஜீத் குமார் ஒடிசாவிலிருந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனுராக் சர்மா இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுள்ளனர்.
