எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களை அடிப்படையாக கொண்டு, 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது. இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று (16.04.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து அவையில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 2026ஆம் ஆண்டுக்கான அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த முன்மொழிந்தார். அதோடு யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவையும் அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் இந்த மூன்று மசோதாக்களையும் அறிமுகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாக்களின் உள்ளடக்கம் குறித்து அல்லாமல், அவற்றை அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தே எதிர்ப்பு தெரிவிக்க முடியும் என்று கூறினார். மேலும், மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த பதில் அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

RELATED NEWS

Latest News