நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு, தொகுதிகளை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது மக்களவையில் அதிகபட்சமாக 550 உறுப்பினர்கள் இருக்கலாம் என்றாலும், 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய மசோதா அமலுக்கு வந்தால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படலாம். இதில் யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்படும்.
மேலும், மகளிர் இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதாவும் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படும்.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற 16 முதல் 18 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளது.
