இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் : ஐ.நா அதிர்ச்சி தகவல்

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சுமார் 4 லட்சம் முதல் 25 லட்சம் பேர் வரை வறுமைக்குத் தள்ளப்படக்கூடும் என்று ஐ.நா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு, உணவுப் பாதுகாப்பின் குறைவு போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் திறன் குறைந்து, வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக உலகளவில் சுமார் 88 லட்சம் பேர் வறுமைக்குத் தள்ளப்படக்கூடும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் இந்த எண்ணிக்கை 4 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருக்கலாம் என்றும், சீனாவில் 1.15 லட்சம் முதல் 6.20 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய மோதலுக்கு முன்பு இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த மக்களின் எண்ணிக்கை 3.51 கோடி இருந்த நிலையில், மோதலுக்கு பின் அது 3.54 கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சூழ்நிலை காரணமாக இந்தியாவின் மனித வள மேம்பாட்டில் 0.03 முதல் 0.12 ஆண்டுகள் வரை இழப்பு ஏற்படலாம் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. தற்போது அந்தப் பகுதியில் ஏற்படும் பதற்றம் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். மேலும் சுற்றுலா, உணவுப் பதப்படுத்துதல், எஃகு உற்பத்தி போன்ற துறைகளும் பாதிக்கப்படுவதால் வேலைவாய்ப்பு குறைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.

RELATED NEWS

Latest News