திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட காதலன்

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் போச்சாரம் அன்னோஜிகுடா, ராஜீவ் குருகுல்பா காலனி பகுதியை சேர்ந்த மனோகர் (25) என்பவர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அவரது பெற்றோருக்கு எய்ட்ஸ் நோய் இருந்த நிலையில், அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதற்கிடையில், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான இளம்பெண்ணுடன் மனோகர் சில ஆண்டுகளாக காதலில் இருந்தார். ஒரு ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. பின்னர் மனோகருக்கு எய்ட்ஸ் இருப்பது இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து மனோகரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். அதன் பின்னர் அந்த இளம்பெண் மனோகருடன் பேசுவதைத் தவிர்த்து வந்தார்.

இதனால் மனோகர், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால், “உனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் என்னை ஏன் திருமணம் செய்ய வற்புறுத்துகிறாய்?” என்று அந்த இளம்பெண் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மனோகர், “தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற எண்ணத்தில், தனது ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினால் அவளுக்கும் எய்ட்ஸ் ஏற்படும்; பின்னர் யாரும் அவளை திருமணம் செய்ய மாட்டார்கள், இறுதியில் தன்னையே திருமணம் செய்து கொள்வார்கள் என்று திட்டமிட்டார்.

அதன்படி, கடந்த 11-ஆம் தேதி மருந்தகத்திற்கு சென்று ஒரு ஊசியை வாங்கிய அவர், அதில் தனது ரத்தத்தை எடுத்து வலுக்கட்டாயமாக இளம்பெண்ணிற்கு செலுத்தியுள்ளார்.

மறுநாள் காலை இளம்பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த போது, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் கருமை இருந்ததை டாக்டர்கள் கவனித்தனர். இதுகுறித்து விசாரித்தபோது மனோகர் ஊசி செலுத்தியதாக இளம்பெண் தெரிவித்தார்.

இதையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

RELATED NEWS

Latest News