கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக சிங்காநல்லூர் அருகிலுள்ள நீர்கோணம்பாளையம் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட அந்த 6 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது தங்கை இசக்கி, திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக், கோவை சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த மனோஜ், திருச்சி சேர்ந்த பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 8 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
