தர்மபுரி டவுன் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே உள்ள தேங்காய் மரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (31). இவர், தர்மபுரியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண் ஒருவரை கடந்த சில காலமாக ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சின்னசாமி தனது காதலை அந்த பெண்ணிடம் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், அவரிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சின்னசாமி அந்த பெண்ணின் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணியளவில், அந்த இளம்பெண் நகைக்கடையில் தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு, ஊருக்குச் செல்வதற்காகத் தர்மபுரி டவுன் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சின்னசாமி, அந்த பெண்ணின் அருகே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பிறகு, சின்னசாமி தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கொடூரமாகக் குத்தினார். இதில் படுகாயமடைந்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் அலறியபடி அங்கேயே சுருண்டு விழுந்தார். இளம்பெண்ணைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற சின்னசாமியை, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் மடக்கிப் பிடித்து அங்கேயே தர்மஅடி கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார், பொதுமக்களிடம் இருந்து சின்னசாமியை மீட்டு கைது செய்தனர். இதற்கிடையே, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இச்சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
