உத்தரபிரதேசம் மாநிலத்தில், ரயில் பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கோமதி நகர் ரயில் நிலையத்தில் ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான இரும்பு பெட்டி மற்றும் ஒரு பையை கண்டுபிடித்தனர். பின்னர் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பூட்டை உடைத்து பெட்டியை திறந்தபோது, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் பகுதி பாலித்தீன் மூட்டையில் சுற்றப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருகில் இருந்த பையில் கைகள் மற்றும் கால்கள் தனியாக மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் வயது சுமார் 25 முதல் 30 வரை இருக்கலாம் என ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தலை காணப்படாததால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்றும், விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
