‘தீர்ப்பு எனக்கு சாதகமா இருக்கனும்’ – நீதிபதியின் இருக்கையில் பில்லிசூனியம் வைத்த பெண்

கர்நாடகாவில் பெண் ஒருவர் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிபதியின் இருக்கையில் பில்லிசூனியம் வைத்ததாக கைது செய்யப்பட்டார்.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, மஞ்சுளா என்ற 65 வயது பெண், முதல் கூடுதல் மூத்த சிவில் நீதிபதி அமரும் மேடை, மேஜை மற்றும் நாற்காலி அருகே வெள்ளை கடுகு விதைகளைத் தூவியுள்ளார். விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இந்தச் செயல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

CCTV காட்சியில் சிக்கிய பெண்

நீதிபதியின் இருக்கை மற்றும் மேஜையைச் சுற்றி வெள்ளை கடுகு விதைகள் சிதறிக் கிடந்ததை கவனித்த நீதிமன்ற ஊழியர்கள், இது இயல்பான சம்பவம் அல்ல என்று சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், மஞ்சுளா நீதிமன்ற அறைக்குள் நுழைந்து விதைகளைத் தூவிவிட்டு அமைதியாக வெளியேறுவது பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த தகவல்

கைது செய்யப்பட்ட மஞ்சுளாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நிலத் தகராறு தொடர்பான சிவில் வழக்கில் நீதிபதி தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவில் அமலில் உள்ள மூடநம்பிக்கை தொடர்பான சட்டத்தின் கீழ் மஞ்சுளா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Related Post

Latest News