கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்தில் நடத்துனரின் பணப்பையை திருடியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC) பேருந்து மெஜஸ்டிக் பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணிகள் அதிக அளவில் இருந்ததால், நடத்துனர் டிக்கெட் வழங்கும் பணியில் பிஸியாக இருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, தனது பணப்பை இருந்த இடத்திற்குச் சென்ற போது அது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகளிடம் விசாரிக்கப்பட்டபோது, ஒரு பெண் பயணி சந்தேகத்திற்கிடமாக அந்த பகுதியில் சென்றதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி, அந்த பெண்ணின் கைப்பையை சோதனை செய்தபோது, காணாமல் போன பணப்பை அதில் இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த பணப்பையை வேறு யாரோ தனது பையில் வைத்திருக்கலாம் என்று பெண் விளக்கம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரை அருகிலுள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
