தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்ததாவது:-
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இன்று (21.4.2026) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்:-
தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
தேர்தல் தொடர்பான திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126(2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் நாளை மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், நாளை மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும் என கூறப்பட்டுள்ளது.


