நாளை வாக்கு எண்ணிக்கை : தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

234 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, மேலும் புதிதாக அரசியல் களத்தில் குதித்த தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் முடிவுகளை முன்கூட்டியே கணிப்பது கடினமான சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : வாக்கு எண்ணிக்கை தெரிந்துகொள்ள புதிய இணையதள முகவரி வெளியீடு

வாக்கு எண்ணும் பணிகள்

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்குகிறது.

வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாளை வாக்கு என்னைகை நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கூடுதலாக துணை ராணுவப்படையும் பாதுகாப்பு பணியில் உள்ளதால் எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் மூன்று முக்கிய வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Latest News