உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் எல்ஏ மாலில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் லிஃப்ட் திடீரென பழுதாகி நின்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் மாட்டிக்கொண்டனர்.
லிஃப்ட் கதவுகள் திறக்காததால் உள்ளே இருந்தவர்கள் பயந்து கூச்சலிடத் தொடங்கினர். சுமார் 35 நிமிடங்களுக்கும் மேலாக லிஃப்ட்டிற்குள் மாட்டிக்கொண்டதால் ஏற்பட்ட பயம் மற்றும் பதற்றம் காரணமாக, ஷாலினி என்ற 17 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் லிஃப்ட் கதவை உடைக்க முயற்சி செய்தனர்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்குப் பிறகு, லிஃப்ட் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மயக்கமடைந்த சிறுமிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மால் நிர்வாகம் போலீசாரிடம் கூறுகையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஜெனரேட்டரை ஆன் செய்யும் பணிகள் நடைபெற்றது. அப்போது, லிஃப்ட்டிற்குள் இருந்த ஒருவர் அதன் கதவை உதைத்ததாகவும், இதன் காரணமாகவே லிஃப்ட்டின் சென்சார் வேலை செய்வதை நிறுத்தி கதவு லாக் ஆகிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
