தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியுள்ளது. சென்னை பாலவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் முகாமை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசியைப் பெறுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள தொலைதூர கிராமங்களில் வாழும் குழந்தைகளும் இந்த திட்டத்தின் பயனை பெறும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஏன் போலியோ சொட்டு மருந்து அவசியம்?
போலியோ என்பது குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இது சிலருக்கு நிரந்தர உடல் ஊனத்தையும் ஏற்படுத்தக்கூடும். தடுப்பூசி மூலம் இந்த நோயை முழுமையாகத் தடுக்க முடியும் என்பதால், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய சுகாதாரத் துறை தொடர்ந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.
இந்தியா போலியோ இல்லாத நாடாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் இந்த வைரஸ் காணப்படுவதால் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
