“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்: காட்பாடியில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் திடீர் ஆய்வு

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், காட்பாடி பகுதியில் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார்.

முதலில் தாராபடவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற ஆட்சியர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

அப்போது சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள், புதுப்பிக்கப்பட்ட சுகாதார நிலையத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சிரமம் ஏற்படுவதாக நேரடியாக ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரச்சினையை உடனடியாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டார்.

தொடர்ந்து காட்பாடி உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு காய்கறி விற்பனை செய்து வந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். கடும் வெயிலில் மேற்கூரை இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், சந்தைக்கு நிரந்தர மேற்கூரை அமைத்துத் தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வியாபாரிகளிடம் அவர்கள் கொண்டு வரும் காய்கறிகளின் விற்பனை நிலவரம், வருமானம் மற்றும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆட்சியர் அக்கறையுடன் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மகளிர் சுயஉதவி குழுவினர் நடத்தி வரும் கேண்டினையும் ஆட்சியர் பார்வையிட்டார். அங்கு உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின் சுவாரஸ்யமான தருணமாக, கேண்டினில் பணியாற்றிய மகளிர் சுயஉதவி குழுவினர் ஆட்சியர் லீலா அலெக்ஸுக்கு சுடச்சுட வடை தயாரித்து வழங்கினர். அவர்களின் அன்பான வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஆட்சியர், பெண்களின் அன்புக்கும் உபசரிப்புக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

Related Post

Latest News