சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

அந்த வகையில், ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் காவல்துறை, மே 1 முதல் புதிய போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய போக்குவரத்து வழிமுறைகள்

மேட்டுப்பாளையம் இலிருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள், காட்டேரி சந்திப்பில் இருந்து சேலாஸ் மற்றும் லவ்டேல் வழியாக நகருக்குள் நுழைய வேண்டும்.

கூடலூர் மற்றும் தெப்பக்காடு நோக்கிச் செல்லும் வாகனங்கள், லவ்டேல் சந்திப்பு மற்றும் காந்தள் முக்கோணம் வழியாக மாற்றி இயக்கப்படும்.

சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆவின் வாகன நிறுத்துமிடம் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானம் பகுதிகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்கள்

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி.

குன்னூர் – பர்லியார் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பால், எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிய வாகனங்களைத் தவிர, மற்ற கனரக வாகனங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் நுழைய அனுமதி இல்லை.

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க ஊட்டியை நோக்கி மக்கள் பெருமளவில் வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதை சமாளிக்கவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Latest News