கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படம், அதன் இயல்பான கதையாலும், மதுரை பின்னணியாலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாரிமுத்து, தனது தனித்துவமான நடிப்பால் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

மதுரையைச் சேர்ந்த மாரிமுத்துவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சவால்களால் நிரம்பியதாக கூறப்படுகிறது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அவர், படிப்பை தொடர முடியாமல் லைட் மற்றும் மைக் செட் அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவரை கவனித்த இயக்குநர் சசிகுமார், ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.
படத்தில் அவர் நடித்த ‘டும்கான்’ கதாபாத்திரம் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் கதையின் முக்கியமான தருணங்களில் இடம்பெற்றதால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அதன்பிறகு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் பல்வேறு வேலைகளை செய்து வாழ்க்கையை முன்னெடுத்ததாக அவர் சில பேட்டிகளில் பகிர்ந்திருந்தார். ரேடியோ கடை வேலை, ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்.
சமீபத்தில் மீண்டும் ஆட்டோ ஓட்டும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கான காரணம் குறித்தும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட மாரிமுத்து, “சசிகுமார் பெயரை பச்சை குத்தியுள்ளேன். நான் குடித்துவிட்டு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் அண்ணனோட நம்பரை கொடுத்துட்டேன். அதனால் சசிகுமார் அண்ணன் என் மீது கோபமாக இருக்கிறார்” என்றார்.
குடிபழக்கத்தால் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் அவர், ஆட்டோ ஓட்டுவது, ரேடியோ செட் போடுவது என கிடைக்கிற வேலையெல்லாம் செய்து வருகிறார்.
