தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் தனது பிரசார நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி வருவது கவனம் பெற்றுள்ளது.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில், த.வெ.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் சின்னம் மற்றும் சால்வை அணிவிக்கப்பட்ட ரோபோ ஒன்று பொதுமக்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. அந்த ரோபோ கை அசைத்தும், சிலருடன் கைகுலுக்கியும் தொடர்பு கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சில இடங்களில் விஜய்யின் உருவப்பட அட்டைகள் பயன்படுத்தப்பட்டதுடன், மற்றொரு தொகுதியில் ஹாலோகிராம் மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உரையாடல் பிரசாரமும் நடத்தப்பட்டது. மேலும், சில பகுதிகளில் விஜய்யைப் போன்ற தோற்றமுள்ள நபரை பயன்படுத்தியும் பிரசாரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ரோபோ பிரசாரம், அரசியல் பிரசாரத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. இதனை ஆதரவாளர்கள் புதுமையான முயற்சி என பாராட்டினாலும், சிலர் இது உண்மையான நேரடி மக்கள் தொடர்புக்கு மாற்றாக இருக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.


