வருமானத்துக்கு மீறி ரூ.300 கோடி சொத்து : தெலங்கானா டிஎஸ்பி கைது

வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், தெலங்கானா காவல்துறையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் பீம் ரெட்டியை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா ஊழல் தடுப்பு பிரிவு கடந்த ஜூலை 2-ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள டிஎஸ்பி பீம் ரெட்டியின் வீடு உள்ளிட்ட மொத்தம் 16 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. சோதனைக்குப் பிறகு, ஜூலை 6-ஆம் தேதி மாலை அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, டிஎஸ்பியின் அறியப்பட்ட வருமானத்தை விட அதிக அளவில் சொத்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சோதனையில், டிஎஸ்பியின் வீட்டில் சுமார் ரூ.3.60 லட்சம் ரொக்கப் பணம், சுமார் 2 கிலோ தங்க நகைகள், சுமார் 20 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.19.91 லட்சம் இருப்பு ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பீம் ரெட்டி மீது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மறைக்கப்பட்ட சொத்துகள் உள்ளனவா, வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News