சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று திடீரென வீசிய பலத்த சூறாவளிக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளிக்காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி 10 விமானங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று, சென்னையில் தரை இறங்க முடியாமல் போனது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக திருப்பதிக்கு அனுப்பப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் சுமார் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
