திருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை பணிக்காக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்புடன் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முக்கிய பணியில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதனை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில், தபால் ஓட்டுகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரியான முறையில் எவ்வாறு எண்ணுவது என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றியும் அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையை சீராகவும் வெளிப்படையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி தலைமையேற்று, தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விரிவாக ஆய்வு செய்தனர்.

Latest News