‘எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசுவது முதல்வருக்கு அழகல்ல’ – முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூரில் ஆற்றிய பேச்சுக்கு கடுமையாக பதிலளித்தார்.

முதலமைச்சரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஒரு முதலமைச்சரின் பேச்சில் கண்ணியமும் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளையும் மதிக்கும் வகையில் பேசுவதுதான் அரசியல் நாகரிகம். ஆனால், ‘பட்டாக்கத்தி, கட்டாக்கத்தி சமாச்சாரம் போல எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற வகையில் பேசுவது ஒரு முதலமைச்சருக்கு ஏற்றதல்ல” என்றார்.

மேலும், “கண்ணதாசன் சொன்னதுபோல், ‘வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல.’ எனவே, இந்த வெற்றி நிரந்தரமானதா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஒருகாலத்தில் காங்கிரஸ் தோற்காது என்று கூறப்பட்டது; பின்னர் அது தோல்வியைச் சந்தித்தது. அதிமுகவும் தங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்று கூறியது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பெறுபவரே உண்மையான அரசியல்வாதி. அதுவும் சொந்த பலத்தில் அல்லாமல், பிறரின் பலத்தில் இருப்பவர்களுக்கு இவ்வளவு தர்பார் தேவையில்லை” என்று விமர்சித்தார்.

கரூர் சம்பவம் குறித்து

கரூர் சம்பவம் தொடர்பாக திமுக மீது முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. இதற்கு யார் காரணம் என்பதை சிபிஐதான் முடிவு செய்யும். திமுகவா, தவெகவா என்பதை விசாரணை முடிவே தெரிவிக்கும்” என்று கூறினார்.

சட்டப்பேரவை மற்றும் ‘விஸ்வரூபம்’ குறித்த கருத்து

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துக்கு பதிலளித்த துரைமுருகன், “வெளிநடப்பு செய்வது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமை. எந்த சபாநாயகரும் கதவை மூடி உறுப்பினர்களை தடுக்க முடியாது. முதலமைச்சருக்கு முதலமைச்சரின் அதிகாரமும் தெரியவில்லை; சபாநாயகரின் அதிகாரமும் தெரியவில்லை” என்றார்.

அதேபோல், “இந்த அரசின் விஸ்வரூபத்தை இனிமேல்தான் பார்ப்பீர்கள்” என்ற முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்த அவர், “நாங்கள் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியையும் பார்த்திருக்கிறோம். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த எம்.ஜி.ஆரின் விஸ்வரூபத்தையும், ஜெயலலிதாவின் ஆட்சியையும் பார்த்திருக்கிறோம். இவர் எம்மாத்திரம் என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

‘கூட்டு களவாணிகள்’ விமர்சனம்

அதிமுகவும் திமுகவும் “கூட்டு களவாணிகள்” என முதலமைச்சர் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, “களவாணி, கிளவாணி போன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளில் நான் பதிலளிக்க விரும்பவில்லை. என்னுடைய அரசியல் பயணம் வேறு; அவருடைய அரசியல் பயணம் வேறு. அந்த அளவுக்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்” என்றார்.

காவிரி – மேகதாது விவகாரம்

காவிரி மற்றும் மேகதாது பிரச்சினை குறித்து பேசுகையில், “காவிரி விவகாரத்தை முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. அதிகாரிகளிடம் ஆலோசித்ததாகவும் தெரியவில்லை. 79 அல்லது 80 அடி நீர்மட்டத்தில் இருந்தாலும் காவிரியை திறக்க முடியும். கடந்த காலத்தில் 56 அடி மட்டுமே இருந்தபோதும் காவிரியை திறந்த அனுபவம் உள்ளது. முதலில் எங்களை விமர்சிப்பதை விட பிரச்சினையின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேகதாது வழக்கில் முந்தைய ஆட்சி முறையாக வாதாடவில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “யார் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை சட்டமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் விரிவாக விளக்குவார்கள்” என்றார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு பணி

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அதில் இருவேறு கருத்துகள் உள்ளன. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று பதிலளித்தார்.

‘கொத்து பரோட்டா’ பேச்சுக்கு பதில்

“கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசியதற்கே கொத்து பரோட்டா போட்டோம்” என்ற முதலமைச்சரின் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, “அந்த மாதிரியான சாக்கனாங்கடை அரசியல் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்று துரைமுருகன் தெரிவித்தார்.

Related Post

Latest News