முதல்வர் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ சேலத்தில் தொடக்கம்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force – SSF) திட்டம் இன்று முதல் சேலம் மாநகர காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு அதிரடிப்படை, சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி அவர்களின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் சரக உதவி ஆணையர் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில், எஸ்.ஐ. அருள்மொழி, எஸ்.எஸ்.ஐ.க்கள் அம்சவள்ளி, சத்தியவதி, பெண் தலைமை காவலர்கள் பிரேமலதா, மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் இந்தப் படையில் இடம்பெற்றுள்ளனர். அதிரடிப்படை வாகனத்தை மட்டும் ஆண் காவலர் ஓட்டுநராக பணியாற்றுகிறார்.

முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண் காவலர்கள் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து கண்காணிக்கவும், பெண்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் புகார்களுக்கு உடனடி பதில் அளிக்கவும் இந்தப் படை செயல்பட உள்ளது.

Related Post

Latest News