7-ம் வகுப்பு மாணவனை மது வாங்க அனுப்பிய பள்ளி ஆசிரியர் கைது

குஜராத் மாநிலத்தில், பள்ளி மாணவன் ஒருவனை மதுபானம் வாங்கி வருமாறு அனுப்பி வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஹரேஷ்கிரி கோஸ்வாமி என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் ஹரேஷ்கிரி கோஸ்வாமி தன்னிடம் பயிலும் 7-ம் வகுப்பு மாணவர் ஒருவரை, தனக்காக மதுபானம் வாங்கி வருமாறு வெளியே அனுப்பி வைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தலைமை ஆசிரியரின் புகாரைத் தொடர்ந்து, மாணவர்களைத் தவறான வழிக்குத் தூண்டுதல் மற்றும் மதுவிலக்குச் சட்டங்களை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆசிரியர் ஹரேஷ்கிரி கோஸ்வாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹரேஷ்கிரி கோஸ்வாமியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Related Post

Latest News