10 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தும் ரயில்வே சுரங்க பாதை மூடல்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மணாங்குப்பம் ஊராட்சியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மாற்று வசதி இல்லாததால் சிலர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

அம்மணாங்குப்பம் – ஆலம்பட்டரை சாலையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில்வே சுரங்கப்பாதை, அம்மணாங்குப்பம், எம்.ஜி.ஆர். நகர், துர்கை நகர், கே.கே. நகர், பரசுராமன்பட்டி, வன்னியர்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்களின் முக்கிய போக்குவரத்து வழியாக இருந்து வருகிறது. மேலும் வேப்பூர், ஒலகாசி, சித்தாத்தூர், பட்டு, நத்தமேடு, ஆலம்பட்டரை, கொண்ணையாத்தம், புதுப்பட்டு, வடக்குப்பட்டரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த பாதையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக சீரமைப்பு கோரிக்கை வலுத்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சுமார் 20 நாட்களுக்கு முன்பு சுரங்கப்பாதை முழுமையாக மூடப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவடையாததால் மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை மூடப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ரயிலில் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் அனைவரும் சுமார் 8 கிலோமீட்டர் கூடுதலாக பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

குறிப்பாக மாலை நேரங்களில் பெண்கள் மற்றும் மாணவிகள் நீண்ட தூரம் மாற்று வழியில் பயணம் செய்வது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். அருகில் உள்ள பள்ளிக்குச் செல்ல கூட பல கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாற்று வழியின் சிரமத்தால் சில மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர் ஆபத்தை உணராமல் நேரடியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளி முடிந்து வரும் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல பெற்றோர் தண்டவாளம் அருகே காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, சீரமைப்பு பணிகள் நடைபெறும் காலத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் தற்காலிக நடைபாதை ஏற்படுத்த வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடித்து சுரங்கப்பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

Latest News